பொறுப்புள்ள வாப்பாமாருகளுக்காக ஒருதினம்
அதிரை யாசிர்
பொதுவாக எல்லா இடங்களிலும் தாய்க்குத் தான் சகல கெளரவங்களும், அம்மாதான் தியாகி, பாசத்தில் புலி என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள், எனினும் குடும்பத்துக்காக மெளனமாக ஏகப்பட்ட தியாகங்களைச் செய்யும் தந்தையர் பற்றி நாம் அலட்டிக் கொள்வதேயில்லை.
எப்போதும் தம்மை விளங்கிக் கொள்ள முடியாதவராக “முசுடு” ஆக, வேலையே கதியெனக் கிடப்பவராக தமது பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்காதவராக, பிள்ளைகளால் அறியப்படும் “தந்தை” உண்மையில் எவ்வாறானவர்? குடும்பத்துக்காக தன்னை ஓடாய்த் தேய்த்துக் கொள்ளும்,எத்தனையோ இன்னல்கள் பட்டாலும், அதனை வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தமது பிள்ளைகளின் மீது படிந்துவிடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமக்கும் தந்தையரை நாம் கனம் பண்ணுகின்றோமா? இராத்தூக்கம் பகல்தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள்,உங்களால் தான் வாப்பா நான் இன்று சமூகத்தில் நிமிர்ந்து நிற்கிறேன் என்று அன்பாக ஒரு வார்த்தை பேசியிருக்கிறோமா?
தந்தை தான் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். பொருளாதாரம், கல்வி, கெளரவம், சுற்றம், வாழ்க்கைத்தரம் என்பனவற்றை பெற்றுத் தந்து பாதுகாப்பது தந்தையே. தனது தியாகத்தின் மூலம் குடும்பத்துக்கு மதிப்பை தருகிறார். தந்தையின் இந்த நடவடிக்கைகளின் போது அவர் குடும்பத்தின் மத்தியில் சில அபிப்பிராயங்களையும் தோற்றுவித்து விடுகின்றார்,கண்டிப்பானவர், வளைந்து கொடுக்காதவர், கர்வம் கொண்டவர் என்றெல்லாம் பெயர்களை அவர் சம்பாதித்துக்கொள்ள வேண்டியதாகிறது. இவற்றையும் கூட தியாகம் என்றுதான் கூறவேண்டும்.
வாப்பா’வின் இந்த நிலையை உம்மாதான் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இவை புரிந்து கொள்ளப்படாத விளக்கப் படாத காரணத்தினால் தான் வாப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே சச்சரவுகள் தோன்றுகின்றன. தியாகங்கள் பலவற்றை எதிர்பார்ப்பின்றி செய்யும் தந்தைமார் தன் வயதான காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்பை விரும்புவது இயற்கையே. தனது குறைந்தபட்ச தேவைகளையாவது பிள்ளைகள் நிவர்த்தி செய்யலாமே என எண்ணுவார்கள். ஆனால் வாய் திறந்து கேட்பதில்லை. எனவே எதிர்காலத்தில் இதே நிலைக்கு ஆளாகவுள்ள பிள்ளைகள் தந்தைமாரின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது அவர்களது கடமை.
இதேசமயம் தந்தைமாரும் ஒரு காலக்கட்டத்தின் பின்னர் தனது ‘குழந்தை வளர்ப்பு கால’ தன்மைகளை, விட்டுக் கொடுக்காத நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தான் தலைவனாகவும் நிர்வகிப்பவனாகவும் இருந்ததால் இப் போதும் அப்படித்தான் இருப்பேன்
எனப் பிடிவாதம் பிடிப்பது அவருக்கு சாதகமாக அமையாது.
இது இப்படி இருக்க, பெரும்பாலான தந்தைமார் தமது பிள்ளைகளின் தயவை அல்லது கவனிப்பை எதிர்பார்க்கின்ற பருவத்தில் அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து அவர்களது குடும்பங்களை நடத்துவதில் மிகுந்த நாட்டம் கொண்ட வர்களாகி விடுகின்றார்கள். இதனாலும் தந்தைமார் கவனிப்பின்றி கஷ்டப்பட நேர்ந்துவிடுகின்றது.
குடும்பத் தலைவன்
மனைவிக்கு கணவன்
குழந்தைகளுக்கு தந்தை
உறவினருக்கு நெருங்கியவன்
சமூகத்திற்கு அந்தஸ்தான பிரஜை
என்ற பல அந்தஸ்துகளுடன் குடும்பத் தலைவனாக வாழும் தந்தை தன் குடும்பத்தில் உரிய அந்தஸ்தை பெறுகிறானா என்பது ஒரு கேள்விக்குறியே! தனக்கு போதிய கெளரவம் கிடைப்பதில்லை என்று எல்லாத் தந்தைமாரும் தமக்குள்ளேயே வெதும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
தன் குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணித்து பாடுபடும் குடும்பத் தலைவன் தன் பிள்ளைகளாலேயே அலட்சியப்படுத்துவதுதான் வெளியில் வராத உண்மை. தன் குடும்பத்தின் மற்றும் குழந்தையின் வருங்காலத்தை கருத்தில்கொண்டு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பிரதிபலிப்பாக தன் மனைவியிடமும் குழந்தையிடமும் எழும் அலட்சிய அபிப்பிராயங்கள் மற்றும் கடுஞ்சொற்கள் ஒரு குடும்பத் தலைவனின் மனதை எந்தளவு சுக்குநூறாக்கி விடுகிறது என்பதை எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறார்கள்?
அதிகாலை துயில் எழுப்பிய நேரத்திலிருந்து கடிகாரமுள் மாதிரி ஓடும் பிள்ளையாகவே பெரும்பாலான தந்தைமார் வாழ்க்கையை செலவிடுகின்றனர். வீட்டு வேலையைக் கூட பகிர்ந்து கொள்ளாத, பொறுப்புடன் நடந்து கொள்ளாத பிள்ளைகள் மத்தியில் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் தந்தையைத் தான் பெரும்பாலான குடும்பங்களில் காண முடிகின்றது.
கல்வி சம்பந்தமான மேல்படிப்பாக இருக்கட்டும், தொழில் முதலீடுகளாக இருக்கட்டும் அல்லது திருமண சம்பந்தங்களாக இருக்கட்டும், தந்தை என்ற ரீதியில் நல்ல கருத்துக்களை எடுத்து உரைக்கும்போது முதலில் பிள்ளைகளைவிட அவர் மனைவியே, “உங்க வாப்பாவுக்கு ஒன்றும் தெரியாது , எதற்கெடுத்தாலும் புத்திமதி சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாரு” என்ற அலட்சியத்தை வெளிப்படுத்துவாள். பிள்ளைகளும் இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு உம்மா சொல்வதுதான் சரி என்று தான்தோன்றித்தனமாக முடிவை எடுத்து விடுவார்கள். இதன் பிரதிபலிப்பு எப்போது தெரியும் என்றால், பிள்ளைகள் தம் வாழ்க்கையை ஆரம்பித்து தனிக் குடித்தனமாகப் போய்விட்டபிறகு கணவனும் மனைவியுமாக தவிப்பில் இருக்கும்போதுதான் அந்தத் தாய் அதை உணர்கிறாள்.
தன்னுடைய உழைப்பில் பெற்ற சொத்து, வீடு, வங்கி சேமிப்பு என்றெல்லா சொத்துக்களையும் அனுபவிக்கப்போவது தன்னுடைய குழந்தைகள்தான் என்பதை ஒவ்வொரு தந்தையும் அறிவான். அவன் எதிர்பார்ப்பதெல்லாம் குடும்பத்தில் தன்னையும்ஒரு தலைவனாக மதித்து தன்னுடைய சொல்லுக்கும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும் என்பதை மட்டுமே.
இதே மகன், மகள்மார் தந்தை, தாயாகும் போது மீண்டும் தன் தந்தையை நினைவு கூருவார்கள். ‘
நான் கேட்டுக் கொள்வதெல்லாம். தந்தைக்குரிய கெளரவத்தை அவருக்கு அவர் வாழும் போதே கொடுங்கள் & அவருடைய தேவைகளை அவர்கேட்காமலே கொடுங்கள்
அல்லாஹ் நாம் அனைவருக்கு அந்த பாக்கியதை அருள துவா செய்தவானக….அதிரை யாசிர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment